Posted by Editor on February 06, 2017

மக்கள் குரலின் மகத்தான பணியாக தமிழ் பேசும் மக்களின் கல்வி தொடர்பான கல்விப் புரட்சியையும், விளையாட்டுத்துறையில் தமிழ் பேசும் மக்களின் திறமைகளை வெளியுலகிற்கு எடுத்துக் காட்டுவதற்கு விளையாட்டுத் துறையில் புரட்சியையும் ஏற்படுத்துவதற்காக தயாராகி வருகின்றோம்.

இதற்கென நாம், மக்கள் குரல் எனும் இணையத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த மக்கள் குரல் இணையத்தளத்தை தமிழ்பேசும் மக்கள் அனைவரும் தினமும் பார்க்க வேண்டும். எமக்கு ஆதரவு வழங்க வேண்டும். இதன் ஆரம்பத்தை விளக்குவதற்கு, இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள இளைஞர்களின் நெஞ்சுரத்தை குறிப்பிடலாம்.

சென்னை மெரீனா கடற்கரையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இடம்பெற்ற புரட்சிக்கு முற்று முழுதாக இளைஞர்களே காரணகர்த்தாக்களாக உள்ளனர். அவர்களின் அகிம்சாவழி போராட்டம் முழு உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. 

இப்புரட்சி, முழு உலகிலும் உள்ள தமிழ் பேசும் மக்களை ஒன்று சேர்த்தது மாத்திரமன்றி, ஒரு குரலில் ஒற்றுமை எனும் கயிற்றின் மூலம், ஜல்லிக்கட்டுக்கு உயர் நீதிமன்றம் விதித்த தடையையே உடைத்தெறியும் பலத்தையும் வழங்கியது. அது இலங்கையிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியது.

ஆம். அதே ஒற்றுமை, தொலைநோக்கு, சமூக எண்ணம் என்பன இலங்கையிலுள்ள தமிழ் பேசும் சமுதாயத்திற்கும் இருக்க வேண்டும்.

மக்கள் குரல் மூலம் நாம் அனைவரும் ஒன்றிணைவோம். எமது மாணவர் சமுதாயத்தை, மிக உயர்ந்த இலக்கை நோக்கியவர்களாக சமூகத்தில் உயர் அந்தஸ்து கொண்டவர்களாக மாற்றுவதற்கு, இதன் மூலம் களம் அமைத்துக் கொடுக்க காத்திருக்கின்றோம். இதன் மூலம், நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை உலகிற்கு பறைசாற்றப் போகின்றோம்.

அந்நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட மக்கள் குரலுடன் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணைவோம்; தமிழ் பேசும் மக்களின் எதிர்கால முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு பாடுபடுவோம். அதுவே உலகத் தமிழர்களாகிய உங்களிடம் நாம் விடுக்கும் வேண்டுகோள்.

தமிழ் மக்களின் கல்விப் புரட்சியை, தமிழர்கள் செறிந்து வாழும் யாழ். மண்ணிலிருந்து ஆரம்பிக்க எண்ணினோம். அதற்காக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை அணுகி, எமது எண்ணத்தை எத்தி வைத்தோம். பல்வேறு கல்விப் பிரிவுகள், விளையாட்டுக்கு முன்னுரிமை வழங்கும் கல்வி முறைமை போன்ற எமது எண்ணக் கருவால் கவரப்பட்ட அவர், எமது முயற்சிக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார். 70% ஆக கலைப் பிரிவை மாத்திரம் தேர்ந்தெடுக்கும் எமது மாணவர்களுக்கு, பல்வேறுபட்ட துறைகளிலும் மேலோங்க இது வழியமைக்கும் எனத் தெரிவித்தார்.

அரசாங்க அதிபர், வேதநாயகத்தை சந்தித்தோம். அவரும், விதையாக விதைக்கப்பட்டுள்ள எமது எண்ணக்கரு வளர்ந்து, ஆல விருட்சமாக மாற வேண்டும் என குறிப்பிட்டார். மாகாண சபை உறுப்பினர் சுகிர்தனையும் சந்தித்தோம். அவரும் அதற்கு ஆதரவு தெரிவித்ததோடு, அதனை யாழில் மேற்கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினார்.

ஆயினும் இவ்விதை விருட்சமாவதற்கு ஏற்ற இடத்தை வழங்குவதற்கு யாரும் ஆர்வம் காட்டவில்லை.

பொது நலன் கருதி ஆரம்பிக்கப்பட்ட முயற்சியில் தளராத நாம், மட்டு நோக்கி புறப்பட்டோம். கிழக்கு மாகாண முதல்வர் ஹாபிஸ் நசீர் அஹமட்டை சந்தித்தோம். அவர் அதற்கு முழு ஆதரவு வழங்கியதோடு மட்டுமன்றி, அதற்காக அவசியமான 50 ஏக்கர் காணியையும் பெற்றுக்கொள்வதற்கு உதவுவதாக உறுதியளித்தார். அவரின் வாக்குறுதிகள், வரள் நிலமாக இருந்த எம் வயல் நிலத்திற்கு நன் மழையாக அமைந்தது.

அதன் அடிப்படையில், உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் கல்விக்கான முன்னோக்கிய திட்டத்தை, மட்டக்களப்பில் இருந்து ஆரம்பிக்கவுள்ளோம். 

இதற்கென குறைந்தது 50 ஏக்கர்  காணி அவசியம். ஏன்?

கல்வியை அடிப்படையாகக் கொண்ட எமது முழுக் கவனமும், மாணவர்கள் வெறும் ஏட்டுச் சுரைக்காய்களாக அமைந்து விடக் கூடாது என்பதாகும். ஆம். மாணவர்கள் விளையாட்டுத் துறையிலும் மிளிர வேண்டும். அதற்காக, சகல விளையாட்டுகளையும் உள்ளடக்கிய விளையாட்டு மைதானங்கள், பயிற்சிக் கூடங்கள் என்பன எமது மாணவ சமூகத்திற்கு அத்தியவசியமாகின்றது.

இலங்கை மாத்திரமன்றி அவசியம் ஏற்படும் நிலையில் வெளிநாடுகளிலும் உள்ள திறமையான பயிற்றுவிப்பாளர்களைக் கொண்டு விளையாட்டுக்கான பயிற்சிகளை வழங்கவுள்ளோம். 

அத்துடன் இலங்கையிலுள்ள வசதியற்ற, திறமையான விளையாட்டு வீரர்களை, அவர்கள் எப்பாகத்திலிருந்தாலும் அவர்களை அழைத்து வந்து, எமது கல்விக் கல்லூரியின் மூலம், தங்குமிட வசதி, உணவு போன்ற அடிப்படைத் தேவைகளை வழங்கி, அவர்களுக்கு அவசியமான பயிற்சிகளையும் வழங்கவுள்ளோம். இதன் மூலம், அவர்கள் வாயிலாக இலங்கை மண்ணுக்கு பெருமையைத் தேடிக் கொடுப்பதோடு, அவர்களுக்கும் நல்ல எதிர்காலத்தையும் வழங்கவுள்ளோம்.

அதே போன்று, வடக்கிலும் சரி, கிழக்கிலும் சரி, மலையகத்திலும் சரி, இப்போதுள்ள தமிழ் பேசும் சமுதாயத்திற்கோ அல்லது மாணவர்களுக்கோ, ஆங்கிலத்தில் பேசுவதில் ஏற்பட்டுள்ள தயக்கம், கூச்சம் அல்லது பேசமுடியாத நிலையை தொடர்ந்தும் நிலைகொள்ளாது தடுக்கும் வகையில், அதனைக் கழையும் வகையில், எமது கல்வித் திட்டத்தில் ஆங்கிலத்திற்கே அதிக முன்னுரிமை வழங்கவுள்ளோம் என்பதை நாம் இங்கு பெருமையுடன் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். 

இவை யாவும் முழுமையாக நடந்தேற வேண்டுமாயின், தமிழ் பேசும் மக்களாகிய நாம் அனைவரும் ஒன்று திரள வேண்டும். இதற்கு உங்கள் ஆதரவு ஒன்றே மிக முக்கியமானது.

நாடு எமக்கு என்ன செய்தது என்பதை அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருப்பதன் மூலம் நாம் எதனையும் அடையப் போவதில்லை. நமது முயற்சியின் மூலம் நாம் நாட்டுக்கு என்ன செய்தோம் என்பதையே நாம் எண்ணத்தில் கொள்ள வேண்டும். அதன் மூலம் நாம் நாளை முழு உலகத்தாலும் பேசப்படுவோம். முயற்சி செய்தால் முடியாதது என்று ஒன்றில்லை.

"நீ உனது கடமையைச் செய், பிரதிபலனை நோக்காதே" என நம் முன்னோர்கள் கூறியிருப்பதில் உள்ள பலம் பொருந்திய அர்த்தத்தை நாம் அனைவரும் உணர வேண்டும்.

உலகிலுள்ள தமிழ் பேசும் அனைவரும், தமிழர்கள் எனும் வகையில் ஒன்றுபட வேண்டும் என்பதே எமது உயரிய நோக்கமாகும். நான் இலங்கைத் தமிழன், நான் இந்தியத் தமிழன், நான் சோனகத் தமிழன் என ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கொண்டு, வேற்றுமையுடன் நிற்காது, நாம் அனைவரும் உலகத் தமிழர்கள் எனும் உணர்வுடன் ஒன்றுபட வேண்டும்.

'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' எனும் முதுமொழிக்கு இணங்க, எமது உரிமைகளை பாதுகாக்க ஒன்றுபடுவோம். அதுவே எமது குரல், அதுவே மக்கள் குரல்.

Categories: 

Admin Tags: 

Comments

உங்கள் பணியோடு என்னையும் இணைத்துக்கொள்ள விரும்பியவனாய் இதை எழுதுகிறேன்.

தமிழ் நாட்டு ஜல்லிக்கட்டு போராட்டம் ஒட்டுமொத்த தமிழ் சமூதாயத்தின் உலகிடக்கைகளில் தவித்துக்கொண்டிருந்த ஏக்கங்களுக்கு ஒரு வடிகாலாய் ஆறுதல் தந்தது சாதீயம்,சடங்கு,வேற்று மொழிப்பற்று என்ற குப்பைமேட்டுக்குள் தன் அடையாளத்தை முழுவதும் தொலைத்துவிட்டு மூத்த நாகரிகமான நாம் பலவருடங்கள் பின்தள்ளப்பட்ட  சமுதாயமாக வாழ்கிறோம்.மூத்த குடியான நாம் பண்டைய காலத்திலேயே ஆன்மிகம், கட்டிடக்கலை, மருத்துவம் ,வீரம் என்று  கொடிகட்டி வாழ்ந்ததை வரலாறு சொல்லுகிறது  ஆனால் குறிப்பிட்ட காலத்திட்க்கு மேல் நம்மால் முன்னேறிச்செல்ல முடியவில்லை காரணம் என்ன என்று ஆராய்ந்தால் நம் வளர்ச்சியை விரும்பாதவர்களினால் புல்லுருவியாக விதைக்கப்பட்ட பிரிவினைவாதம் பல்லிளிப்பதை காணமுடியும் சாதியம்,பிரதேசம் என்று தமக்குள்  ஆயிரம் பிரிவினையை வளர்த்துக்கொண்டு ஆக்கபூர்வமான சிந்தனை நேரத்தையும் கொன்றழித்து சாதி சண்டை அரசியல் சண்டை,சினிமா சீரியல் என்று நாம்   வீணாகிக்கிடக்கிறோம்.நமது எதிர்கால சந்ததியை கருதிட்கொண்டு எமது பழமையான சிந்தனைப்போக்கை மாற்றினால்தான் நாம் பிழைத்து எழ முடியும்.கல்வி அறிவிலும் விளையாட்டிலும் விஞ்ஞான அறிவிலும் உயர்ந்த சமூகமாய் எமது எதிகால சமூதாயம் மாற நாம் நாடுகள் கடந்து தமிழராய் ஒன்றிணைய வேண்டும் இந்த தீயை பற்றவைத்த தமிழ் நாடு மாணவர்களுக்கு ஒரு சல்யூட் 

உங்கள் பணியில் என்னையும் இணைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.  நன்றி  

Add new comment

left

All the latest news and live updates on politics, arts, entertainment, events in Sri Lanka, India, World, States and Cities from, Makkal Kural

 
 

Newsletter

எமது செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற