Posted by Editor on February 22, 2017

 

கேப்பாபுலவு மக்களே, உங்கள் துயரம் எங்கள் காதுகளில் ஒலிக்கின்றது. தினமும் பத்திரிகையை எடுத்தால் நீங்கள் உங்கள் குழந்தைகள் குடும்பத்துடன் படும் வேதனை தொடர்பிலான செய்திகளையே பார்க்க வேண்டியுள்ளன.

ஏன் இந்த துயரம்? உங்கள் துயர் துடைக்க யாரும் முன்வருவது போல் தெரியவில்லை. தமிழ் பேசும் அரசியல்வாதிகள் எவரும் இச்சம்பவத்தை பெரிதாக நினைக்கவில்லை என்றே தோன்றுகின்றது.

நல்லாட்சியாக தொடரும் இந்த ஆட்சியில், நாம் எமது உரிமைகளை வெற்றிகொள்ள வேண்டிய தேவையில் உள்ளோம். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள தவறின், நாளைய சமூகத்திற்கு நாம் விட்டுச் செல்ல வேண்டியது, நாம் செய்யவுள்ள இந்த காலாத்தாலான தவறையேயாகும். இவ்வாய்ப்பை தவறவிடுவது, நாம் இந்நாட்டில் வாழும் உரிமையை தாரை வார்த்துக் கொடுப்பதற்குச் சமனானதாகும்.

மக்கள் பிரதிநிதிகளே... மக்களின் சேவகர்களே... தமிழ் பேசும் அரசியல்வாதிகளே இது உங்கள் கவனத்திற்கு.

தற்போதுள்ள ஜனாதிபதி, தன்னலமற்ற, கருணை உள்ளம் கொண்டவர் என்பதை பலமுறை நிரூபித்துள்ளார். தன்னைக் கொலை செய்ய வந்தவரை, அதுவும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை மன்னித்து வாழ்வளித்து, தான் ஒரு காந்தியவாதி என்பதை உலகிற்கே பறை சாற்றினார். 

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அடைந்த வெற்றியை அடுத்து, முன்னாள் சட்ட மாஅதிபர் மொஹான் பீரிஸ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து "என்னை பதவியிலிருந்து அகற்றிவிட வேண்டாம். நீங்கள் எதைச் சொன்னாலும் அதனை மேற்கொள்ளத் தயாராக உள்ளேன்" என அப்பதவிக்கே இழுக்கை ஏற்படுத்தும் வகையில் கூறியதை அடுத்து, உடனடியாக அவரை அப்பதவியிலிருந்து நீக்கியதன் மூலம், தனது நேர்மையை மேலும் ஒரு முறை பறைசாற்றியிருந்தார் தற்போதுள்ள ஜனாதிபதி.

சட்டத்தை அதன் இறையாண்மையில் செல்ல விட வேண்டும் எனும் எண்ணம் கொண்ட ஒருவராருக்கே இக்காரியத்தை மேற்கொள்வதற்கான தற்றுணிவு காணப்படும்.

இன்றேல் முன்னைய ஆட்சியைப் போல், தனது எண்ணம்போல் அமைக்கப்பட்ட சட்டசபை, அதனை அமுல்படுத்தும் நீதிச்சபை என சட்டத்தை சட்டமாக மதிக்காத மற்றுமொரு இருண்ட ஆட்சியை நோக்கி இந்நாட்டை கொண்டு சென்றிருக்க முடியும்.

பதவி ஆசை யாரைத்தான் விட்டது எனும் மரபை தகர்த்தெறிந்து, பதவியேற்ற தினத்திலேயே தனது 6 வருட பதவிக் காலத்தை, 4 வருடமாக குறைத்துக் கொள்ள விரும்பிய தற்போதுள்ள ஜனாதிபதி, பதவி ஆசை தனக்கில்லை என்பதை நிரூபித்தவர். பதவி ஆசை அற்றவருக்கே இப்பதவி என பறைசாற்றும் வகையில், இரு வருடத்தை ஒரு வருடமாக குறைத்து, நல்லாட்சிக்கு 5 வருடம் என ஆயுள் குறைக்கப்பட்டது. 

5 வருடத்தில் நல்லாட்சியின் நிலை என்னவாகும் எனும் கேள்விக்கு, ஜனாதிபதியின் ஆட்சிக் காலமும் ஒரு காரணியாக இருக்கும் பட்சத்தில், இந்நல்லாட்சியின் ஆயுளை 5 வருடம் அல்ல 100 வருடமாக அதிகரிக்க வேண்டும் என்றே மக்கள் கூறுவர்.

தற்போதைய ஜனாதிபதி, சிறுபான்மை மக்களின் உரிமைக்கும், அவர்களின் நிம்மதியான வாழ்விற்கும் ஓர் உத்தரவாதமான முடிவை வழங்குவார் எனும் தமிழ் பேசும் மக்களின் வேரூன்றிய நம்பிக்கைக்கு பாத்திரமாக காணப்படுகின்றார் என்றே கூற வேண்டும்.

ஏனெனில் முன்னைய ஆட்சிக் காலத்தில், அதிமேதகு ஜனாதிபதிக்கான செலவு என வாரி இறைக்கப்பட்ட மக்கள் வரிப் பணத்தை, பல நூறு மடங்காக குறைத்ததன் மூலம், பணத்தாசை அற்ற மக்களின் வரியை வீணாக செலவிடக்கூடாது எனும் எண்ணம் கொண்ட ஒரு தலைவராலேயே, மக்களின் எண்ணத்தை நிறைவேற்ற முடியும்.

கடந்த ஆட்சியில் ஜனாதிபதிக்கான செலவாக இருந்த ரூபா 10,500 கோடி, இவ்வாட்சியில் ரூபா 250 கோடியாக மாறியதை ஞாபகமூட்டுவதும் ஊடக தர்மம் அல்லவா. 

இந்நாட்டிற்கு பல தலைவர்கள் உருவான போதும், மக்கள் மனதில் இடம்பிடித்த தலைவர்களாக ஒரு சிலரே தடம் பதித்தனர். செயல் வீரர் என மக்களால் அழைக்கப்பட்ட, முன்னாள் ஜனாதிபதிகளில் ஒருவரான ரணசிங்க பிரேமதாசவிற்கு பின்னர், தமக்கு கிடைத்த உன்னத தலைவர் என தற்போதைய ஜனாதிபதியை மக்கள் கொண்டாடுகின்றனர்.

இவ்வாறான ஒரு நிலையில், கேப்பாபுலவு மக்களே, உங்கள் காணி உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே அனைவரதும் பிரார்த்தனையும் எண்ணமுமாகும். ஒரு சில சூழ்ச்சியாளர்கள் இப்போராட்டத்தை வேறு திசைகளில் திருப்பி அரசாங்கத்திற்கு எதிரான சிறுபான்மை மக்களின் எதிர்ப்புக் குரலாக வெளிக்காட்ட முனைகிறார்கள். இது சிறுபான்மையினர் தாங்களே தங்களுக்குச் செய்யும் ஓர் அநியாயமாகும்.

ஆட்சிக்கு வந்த பின், பல்லாயிரம் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளை மக்களுக்காக விடுவித்த இவ்வரசாங்கமே, இப்பிரச்சினைக்கு சிறந்த தீர்வை வழங்குவதாக உத்தரவாதம் அளித்துள்ள நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் காணிப் போராட்டம், ஒரு சிலரின் அரசியல் காய் நகர்த்தலாகவே கருதப்பட வேண்டியுள்ளது.

தற்போதுள்ள நிலையில் இப்போராட்டம் அவசியமற்றதாகும். உங்களது காணிகளை விடுவிப்பதற்காக நீங்கள் போராட்டம் நடாத்த வேண்டிய அவசியமில்லை. ஜனநாயக நாடான இலங்கையில், எல்லோருக்குமான அவரவர் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளும் மக்கள் பாவனைக்காக உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரது எண்ணமுமாகும். இவ்வெண்ணம், உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன் செயல் வடிவில் அமுலாக வேண்டும். எமது நோக்கம் நிறைவேறாவிடின் தேர்தலில் அதற்கான பதிலை வழங்க வேண்டும். வாக்குச்சீட்டு என்பது உத்தரவாதமளிக்கப்பட்ட மக்களின் பலம் என்பதை மறந்துவிடக் கூடாது.

மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இதுவே, தமிழ் பேசும் அரசியல்வாதிகள் நினைத்திருந்தால், எத்தகைய பிரச்சினை வந்தபோதிலும், அதற்கான தீர்வை பேச்சுவார்த்தை மூலம் எட்டியிருக்கலாம். ஆனால் அவர்கள் அதற்கான முயற்சிகளை குறிப்பிடும்படியான வகையில் மேற்கொள்ளவில்லை. கிழக்கில் பல்வேறு முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், கிழக்கில் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருவதுடன், இவ்விடயம் குறித்து பல்வேறு தூரநோக்குடனான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை பாராட்டுக்குரியது. ஏனையோரும் இவ்விடயம் தொடர்பில் கரிசனையோடு செயற்பட வேண்டும் என்பதே மக்களின் அவாவாகும்.

தேசிய கலந்துரையாடல் அமைச்சர் எனும், மக்களின் சகவாழ்வு, நல்லிணக்கம் தொடர்பான முக்கிய அமைச்சுப் பதவியை வகிக்கும் மனோ கணேசன், "தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து பேசுவோம்" என அறிக்கை வெளியிட்டிருந்தார். இவ்வாறு பொது எண்ணம் கொண்ட விடயத்தில், சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் ஒன்றிணைய வேண்டும்.

'கண் கெட்ட பின் நம்ஸ்காரமா?' எனும் பழமொழியை ஒட்டியதாக, மக்கள் ஒப்படைத்த பொறுப்பு மிக்க பணியை, 5 ஆண்டுகள் வரை, கொண்டது என்ன? கொடுத்தது என்ன? எனும் கேள்விக்கு விடையற்றதாக மாற்றிவிடாது, மக்கள் பிரதிநிதிகள் எனும் பொறுப்பான பணியை, ஒன்றுபட்டு ஒருங்கே குரல் கொடுப்பதற்காக ஓரணியில் அனைவரும் ஒன்றுபட வேண்டும். அதன் மூலம் சிறுபான்மையினரின் பலத்தை நிரூபிக்க முடியும். அதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

எள்ளுக்கும் கொள்ளுக்குமாய் பிரிந்து நிற்கும் அரசியல்வாதிகள், ஒன்றிணைவதன் மூலம், ஆட்சியையோ, அதிகாரத்தையோ தீர்மானிக்கும் சக்தியை சிறுபான்மையினர் பெறுவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

எத்தேர்தல் வந்த போதிலும், பதவிக்காக சோரம் போகாமல், மக்கள் பணிக்காக வழங்கப்படும் மக்கள் பிரதிநிதித்துவத்தை, அதன் பலத்தை, அம்மக்களின் தேவைக்காக பயன்படுத்த வேண்டும் எனும் எண்ணத்துடன், அத்தேர்தலுக்கு முகம் கொடுப்பதை விடுத்து, தன்னை தானே, காட்டிக் கொடுக்கும் ஈனச் செயலை புரிந்து, மக்கள் எதிர்பார்ப்பையும், விடிவு புலராதா எனும் எண்ணத்துடன், அவர்கள் அளித்த  வாக்குகளையும் வீணடிக்கக் கூடாது என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

கல்வி, பண்பாடு, சமூக அக்கறை எனும் பல்வேறு விடயங்களில், இலங்கையிலுள்ள இளைஞர் சமுதாயம் முதற்கொண்டு, அனைத்து மட்டங்களிலும் உள்ள மக்களும், அரசியல் தொடர்பான சிறந்த தெளிவையும் அறிவையும் கொண்டுள்ளார்கள். தங்கள் உரிமைகளை பெற்றுத்தராத பிரதிநிதிகளை, சமூகத்தில் தலை காட்ட முடியாத நிலைக்குத் தள்ளுவதற்கும் அவர்கள் அஞ்சமாட்டார்கள். அதனை, கடந்து வந்த பல்வேறு தேர்தல்களிலும் நிரூபித்துள்ளார்கள். 

எனவே தலைவர்களே ஒற்றுமைப்படுங்கள், மக்கள் உரிமைகளை வென்றெடுங்கள். சமூக நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதே அரசியல் என்பதை மறந்து செயற்படாதீர்கள்.

சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். நல்லாட்சியின் பயனாக கிடைத்துள்ள, ஜனாதிபதி மற்றும் பிரதமர், சிறுபான்மையினரின் நலன் தொடர்பில் பரந்த மனப்பாங்குடன் செயற்பட்டு வரும் நிலையில், அவ்வாய்ப்பை உரிய வகையில் பயனுறுத்தி, அம்மக்களின் நலனுக்காக, அவர்களின் தேவைகளை அறிந்து செயற்படுத்துங்கள். 

கட்சி, இன, மத பேதமின்றி, கிடைத்துள்ள அரிய வாய்ப்பை பயன்படுத்தி ஒன்றிணைந்து பணியாற்றுங்கள். கேப்பாப்புலவு போன்ற பிரச்சினைகளை மக்கள் தங்கள் கையில் எடுத்து தீர்க்க வேண்டிய தேவையை ஏற்படுத்தாதீர்கள். கேப்பாப்புலவு மக்களுக்கு விடிவு கிட்டும் எனும் எதிர்பார்ப்புடன், உங்களை விமர்சிக்கவும், வழி நடாத்தவும், பாராட்டவும் உரிமை கொண்ட நாம், தொடர்ந்தும் உங்களை அவதானித்துக் கொண்டிருக்கிறோம்.

வளரும்...

 

Categories: 

Admin Tags: 

Add new comment

left

All the latest news and live updates on politics, arts, entertainment, events in Sri Lanka, India, World, States and Cities from, Makkal Kural

 
 

Newsletter

எமது செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற