Posted by Editor on March 07, 2017

சீனா எமது நண்பன் என்பதை பெயரளவில் தான் நாம் ஒப்புக்கொள்ள முடியும். எல்லோருக்கும் பணக்கார நண்பர்கள் இருந்தால் அதில் அவர்களுக்கு ஒரு சந்தோஷம். அவர்களை மகிழ்ச்சிப்படுத்த அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்ய நினைப்பர். ஆயினும் இவ்வாறான நட்பின்போது, அவர்கள் எந்த எண்ணத்தில் பழகுகின்றார்கள் என்பது தொடர்பில் நாம் அறிந்திருக்கமாட்டோம். கபட எண்ணத்துடன் எம்முடன் பழகும் அவ்வாறான பணக்கார நண்பன் தொடர்பில் நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. குறித்த சந்தரப்பத்தில் அவர்கள் பற்றி நாம் அறிந்திருக்காதபோதிலும், பின்னர் அவர்களால் எமக்கு கேடுகள் ஏற்படும் நிலையில் அவர்களது சுயரூபத்தை நாம் அறிய முடியும்.

அவ்வாறான நண்பன் எந்தவொரு விடயத்தையும் எமக்கு இலவசமாக தரமாட்டான். அது போன்றே இலங்கைக்கு கிடைத்துள்ள சீன நண்பன், தான் வழங்கும் பணத்தை இலவசமாக வழங்கவில்லை. இலாபத்தை மையமாகக் கொண்டு நட்புறவு காட்டும் இந்நண்பன், ஒவ்வொரு சதத்திற்கும் அசலுடன் வட்டியை எதிர்பார்த்தே எமக்கு வழங்குகின்றனர். அது அப்படியாயின், அவ்வாறனா நண்பனை நாம் எப்படி உண்மையான நண்பராக கருத முடியும். முடிந்தால் "வட்டி வேண்டாம் முதல் மட்டும் இருந்தால் போதும். உங்கள் நலனை கருதியே நாங்கள் உதவுகின்றோம்" என்று கூறச் சொல்லுங்கள், பார்க்கலாம்.

எமது அரசு இவ்வாறான நட்புறவு பாராட்டுவது தெரிந்தா அல்லது தெரியாமலா செய்கின்றது என எண்ணத் தோன்றுகின்றது. 

எமது மண்ணை, சீனாவிற்கு 198 வருட குத்தகைக்கு கொடுக்க போகின்றது. முடிவில் இந்த நாடும் அவர்களுக்கு சொந்தமாக போகின்றது. பழையபடி நாம் மன்னர் காலத்தில் வாழ்ந்த மாதிரி அவர்களுக்கு அடிமையாகவே வாழ வேண்டும்.

அரசு இதனை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு குத்தைகைக்கு வழங்கப்படும் 198 வருடம் என்பது, 5 தலைமுறைக்கு சமனான காலமாகும். அவ்வாறு 5 தலைமுறைகள் கடக்கின்ற நிலையில், அவர்களும் நம் நாட்டு பிரஜைகள்தான். அப்படி வரும்போது ஹம்பாந்தோட்டை அல்ல தெற்கு பிராந்தியமே அவர்கள் வசம் ஆகிவிடும். அவ்வாறே, 5 ஆவது தலைமுறையில் அரசாங்கமும் அவர்கள் வசம் ஆகிவிட்டாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே கூற வேண்டும். 

தற்போதைய நிலையில் சுமார் 5 இலட்சம் சீனர்கள் பல்வேறு வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில், இலங்கையில் பணி புரிந்து வருகிறார்கள் என்று தரவுகள் குறிப்பிடுகின்றன. இந்நிலையில் இவ்வாறு 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அவர்களுக்கு கொடுக்கும் நிலையில், இன்னும் 15 இலட்சம் பேர் இங்கு வருகை தருவார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. 

198 வருடங்களின் பின் அவர்களது சன்த்தொகையை நினைத்துப் பாருங்கள். நமது நாட்டின் நிலைமை என்ன என்பதை சிந்தித்துப் பாருங்கள். இப்போது நமது நாட்டில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற நிலை உள்ளது. சீனாவில் இத்தனை வருடத்தில், அவர்கள் சனத்தொகையின் காரணமாக, ஒரு பிள்ளைதான் பெற முடியும் என்ற சட்டம் இருந்து வந்தது. அண்மையில் மாற்றமடைந்த அரசாங்கத்தின் பின்னர், இந்நிலை மாறி, தற்போது ஒரு கணவன் மனைவி இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனும் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

ஆயினும் அவ்வாறான சனத்தொகை பரம்பலை கொண்ட சீனர்களுக்கு, குறிப்பிட்ட அந்நாட்டு சட்டம் அவர்களது நாட்டிற்கே பொருத்தமானது என்பதை நாம் கருத்திற்கொள்ள வேண்டும். அவ்வாறானோர், இங்கு வந்து, அவர்களது தொழிற்சாலை உற்பத்தி போன்று, மக்களை உற்பத்தி செய்தார்களேயானால், தற்போது பெரும்பான்மையாக காணப்படும் நாம் மிக விரைவில் சிறுபான்மை எனும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோம் என்பதை மறக்கக்கூடாது.

எமது கடனுக்காக எமது நாட்டின் மானத்தை விற்கக்கூடாது. எமது உயிரை பணயம் வைத்தாவது எமது நாட்டை காக்க வேண்டும். எமது நாட்டின் கடனை அடைப்பதற்கு ஒவ்வொரு குடிமகனும் தம்மால் இயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும். இது எமது நாடு. இதை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது.

அரசுக்கு ஒரு சிறிய விண்ணப்பம், சீனாவிற்கு 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கொடுக்க விரும்புகின்றீர்கள். அதே நேரத்தில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களின், அவர்களது சொந்த நிலத்தை அவர்களுக்கு கொடுப்பதில் ஏன் தாமதம் காட்டுகின்றீர்கள். அவர்கள் என்ன பாவம் செய்தார்கள். உங்களை நம்பித்தானே உங்களுக்கு வாக்களித்தார்கள். நீங்கள் வந்தால் நல்லாட்சி அமையும். நல்லாட்சி அமைந்தால் தமக்கு விடிவு காலம் ஏற்படும். தாங்கள் நிம்மதியாக வாழலாம் என்ற நம்பிக்கையுடன்தானேன தான் வாக்களித்தார்கள். நீங்களும் அதை ஏற்றுக்கொண்டீர்கள். தற்பொழுது அவர்களது காணிகளை தருவதற்கு ஏன் தயக்கம் காட்டுகின்றீர்கள்? 
சற்று சிந்தித்து பாருங்கள். அவர்களது வாக்கு மட்டும் கிடைக்காது போயிருந்தால் இந்த நல்லாட்சி அரசாங்கம் அமைந்திருக்குமா? இந்த நாட்டு மக்களுக்கு நிம்மதி ஏற்பட்டிருக்குமா? வட கிழக்கு மக்கள் அரசாங்கத்திடம் பெரிதாக ஒன்றும் கேட்கவில்லையே. அவர்களது சொந்த இடத்தில் வாழும் உரிமையத்தானே கேட்கிறார்கள். அவர்களது இடத்தை அவர்களுக்கு கொடுப்பதில் சட்டத்தில் என்ன பிழை இருக்கின்றது.

வெளியாருக்கு 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை வழங்கும்போது, எம்மக்களுக்கு ஏன் அவர்களது காணிகளை வழங்கக்கூடாது. தேர்தலும் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. மக்களது மனம் வெந்து கொண்டிருக்கின்றது. தேர்தலுக்கு முன் நீங்கள் சரியானதொரு முடிவை எடுக்காவிட்டால், மக்களிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பிவிடும். ஆகையால் எமது மக்களின் பிரச்சினையை, தங்கள் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு, உடனடியாக செயலில் காட்ட வேண்டும் என்று விரும்புகின்றனர்.

அரசாங்கம் கூறப்போகின்றதா, அவர்களது காணிகளை அவர்களுக்கு விடுவிப்பதில் அரசாங்கத்திற்கு பாதுகாப்பு இல்லையென்று. அப்படியானால் புலிகளை முற்று முழுதாக அழித்து விட்டோம் என்று கூறுவது பொய்யா? இராணுவத் தளபதிகளும், புலனாய்வுப் பிரிவும் புலிகளால் எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லையென கூறப்படுவது தவறா? எமது நாடு முன்னேறவேண்டுமானால் எமது மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமானால் இந்த நல்லாட்சியில் மக்களுடைய முக்கியமான பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும். அரசு எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்ற சொல்லுக்கேற்ப நடக்க வேண்டும்.

வெளிநாட்டில் வாழும் புலம்பெயர்ந்தவர்கள் திரும்பவும் வந்து எம் நாட்டில் வாழ முடியும் என்ற நம்பிக்கையை ஊட்ட வேண்டும். அவர்களுக்கு எமது நாட்டில் எந்த பிரச்சினையம் இல்லை. நீங்கள் தைரியமாக வந்து இங்கு முதலீடு பண்ணலாம் என்ற எண்ணங்களை உருவாக்க வேண்டும். அதற்கு முன்னுதாரணமாக எமக்கு வட கிழக்கு மக்களின் காணிகளை விடுவித்து அரசாங்கத்தின் நல்லெண்ணத்தை வெளிக்காட்ட வேண்டும்.

அரசாங்கம் காணிகளை கொடுப்பதற்கு எதிர்க்கட்சியினரை கண்டு பயப்படுகின்றதா? இந்த காணிகளை கொடுப்பதானால் உங்களது பதவி போய்விடும் என்று பயப்படுகின்றீர்களா? இந்த பதவி யாரால் வந்ததோ அவர்களுக்கு உதவுவதன் மூலம் உங்களது பதவி போய்விடும் என்று நினைத்தால் போகட்டும். நல்லவற்றை செய்த எவரும் கெட்டுப்போனதில்லை. ஒன்றும் மட்டும் நான் திடமாகவே கூறுகின்றேன். நீங்களே நினைத்துப்பாருங்கள். ஆண்டவன் நல்லவர்களை சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டான். கெட்டவர்களுக்கு நிறைய கொடுப்பான் ஆனால் கைவிட்டுவிடுவான். என்பது மிகத் தெளிவான உண்மை.

ஆகவெ எமது அரசாங்கம் நல்ல அரசாங்கம். இந்த அரசாங்கத்தில் இந்த பிரச்சினைகள் தீராவிட்டால் என்றுமே தீரப்போவதில்லை. இந்தப் பிரச்சினை தீர்ந்தால் எமது நாட்டுக் கடன் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர புலம்பெயர்ந்தவர்கள் தங்களால் இயன்ற உதவிகளை எமது நாட்டுக்கு செய்வார்கள் என மக்கள் நம்புகின்றனர்.

வளரும்.

 

Categories: 

Admin Tags: 

Add new comment

left

All the latest news and live updates on politics, arts, entertainment, events in Sri Lanka, India, World, States and Cities from, Makkal Kural

 
 

Newsletter

எமது செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற