Posted by Editor on August 13, 2018

`யாரென்று தெரிகிறதா..? இவன் தீயென்று புரிகிறதா?' - இந்த இரண்டு கேள்விகளையும் ஐந்தாண்டுகளுக்கு முன் எழுப்பியது விஸ்வரூபம் முதல் பாகம். இப்போது அதற்கான பதில்களைத் தர முயன்றிருக்கிறது, இரண்டாம் பாகம். பாஸ் மார்க் வாங்கும் பதில்களா அவை? 'விஸ்வரூபம் 2' படம் எப்படி?

விஸ்வரூபம் 2 விமர்சனம்

முதல் பாகத்தில் விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறது இரண்டாம் பாகம். நியூயார்க்கில் நடைபெறவிருந்த குண்டுவெடிப்பை தகர்த்த கையோடு இங்கிலாந்து செல்கிறது கமல் அண்ட் டீம். அங்கே கிடைக்கும் சின்னச் சின்ன தடயங்களை வைத்து முன்னேறும் கமலுக்கு ஓமர் அடுத்ததாக லண்டனையும் இந்தியாவையும் குறிவைத்திருக்கும் திட்டம் புலனாகிறது. அதை எப்படி முறியடிக்கிறார்? உண்மையில் கமல் யார்? எப்படி ஓமரோடு சேர்ந்தார் போன்ற முடிச்சுகளை எல்லாம் முன்பின்னாக அவிழ்ப்பதுதான் மீதிக்கதை.

முதல் பாகத்தில் பார்த்த அதே 'செம ஷார்ப்' கமல். காட்சிக்குக் காட்சி உடல்மொழியில் கெத்து காட்டுகிறார். நியூயார்க்கில் சீரியஸ் மோடில் இருந்த கமல் இங்கிலாந்தில் இலகுவாகி காமெடியிலும் வெளுத்து வாங்குகிறார். குறிப்பாக, இந்திய அதிகாரி ஈஸ்வரய்யரோடு அவருக்கு நடக்கும் உரையாடல்கள் எல்லாம் 'தெறி' ரகம். அவரின் கதாபாத்திரம், 'ஓர் அரசியல்வாதி'யை நினைவுபடுத்துவதை தடுக்க முடியவில்லை. வகீதா ரஹ்மானுடனான தாய் - மகன் உரையாடல் நெஞ்சில் லேசாக சுமை ஏற்றுகிறது. ஆனாலும், முதல் பாக கமலை இந்தக் கமலால் ஓவர்டேக் செய்யமுடியவில்லை என்றே தோன்றுகிறது.

எலியும் பூனையுமாக ஆண்ட்ரியாவும் பூஜா குமாரும். தொடக்கத்தில் ஜாலியாக இருக்கும் இவர்களின் சீண்டல்களும் மோதல்களும் ஒருகட்டத்துக்குப் பின் போரடிக்கின்றன. ஆனால், இருவருக்குமே முதல் பாகத்தைவிட நிறைய ஸ்பேஸ் கொடுத்திருக்கிறார் உலக நாயகன். பூஜா குமாருக்கு கமலோடு ரொமான்ஸ் செய்யும் ட்யூட்டி! ஆண்ட்ரியாவுக்குக் கொஞ்சம் சீரியஸான ஆக்‌ஷன் அவதாரம். இருவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வெளியைக் கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

கரகர குரல் வில்லன் ராகுல் போஸ். முதல்பாகத்தில் அவரைப் பார்த்தாலே தொற்றிக்கொள்ளும் பயமும் பதற்றமும் இந்தப் பாகத்தில் மிஸ்ஸாகின்றன. முதல் பாக பில்டப், இதில் முதல் பாதி பில்டப் எனப் பாகுபலி போல இடைவேளைக்குப் பின் திரையில் தோன்றுபவர் சுமாரான கதையமைப்பால் மெல்ல மங்கி ஒளியிழக்கிறார். சலீமாக வரும் ஜெய்தீப் அஹ்லாவத் டிபிக்கல் தமிழ்ப் பட அடியாள். அதிகம் பேசாமல், ஆனால் தனக்கேயுரிய ஸ்டைல் காட்டும் சேகர் கபூர்தான் கமலுக்கு அடுத்து செகண்ட் ரேங்க் வாங்குகிறார். 

விஸ்வரூபம் 2

படத்தின் மிகப்பெரிய பலம் நிஜ விவரங்களை வைத்து கதை பின்னியிருப்பது. ஆஃப்கனின் அரசியல் சூழல், இங்கிலாந்தில் பல ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கப்பல் போன்ற ரியல் விஷயங்கள் எல்லாம் கதைக்கு சுவாரஸ்யம் கூட்டுகின்றன. முதல் பாகத்தைப் போலவே இதிலும் சண்டைக் காட்சிகள் அவ்வளவு தத்ரூபமாக இருக்கின்றன. ஆங்காங்கே வரும் வன்முறையின் அழகியல்கூட ரசிக்க வைப்பதாக இருக்கிறது. இந்த லிஸ்டில் அடுத்தாக இடம் பிடிப்பத்திருப்பது வசனங்கள். 'இந்தியாவுலதான் நீ தீவிரவாதி, பாகிஸ்தான்ல நீ மாண்புமிகு தீவிரவாதி', 'துரோகம் பண்ணா உங்க நாட்டுலதான் பதவி கொடுப்பாங்க. இந்த நாட்டுல துரோகம் பண்ணா சாவுதான்' போன்ற அரசியல் வசனங்கள் எல்லாம் சுளீர் ரகம். 

பாடல்களில் ஹிட்டடித்த ஜிப்ரான், பின்னணி இசையில் ஏப்ரல் ஃபூல் என்கிறார். பரபரப்பான காட்சிகளில் தேமேவென ஒலிக்கும் பின்னணி இசை, நம்மை ஒன்றவிடாமல் எட்ட நின்றே பார்க்கவைக்கிறது. அந்தக் குறையை முடிந்தளவுக்குப் போக்க தங்கள் ஒளிப்பதிவின் மூலம் முயல்கிறார்கள் ஷனு வர்கீஸும் ஷாம்தத் சைனுதீனும். ஆஃப்கனின் புழுதி படர்ந்த வீடுகள், டெல்லியின் இண்டு இடுக்குகள், கனல் கக்கும் சண்டைக்காட்சிகள் என எல்லாவற்றிலும் ஒளிப்பதிவு டாப் க்ளாஸ். 

டெக்னிக்கலாகப் பல விஷயங்களில் கவனம் செலுத்தியிருக்கும் கமல், திரைக்கதையில் கோட்டைவிட்டிருக்கிறார். 'ஏதோ பெருசா நடக்கப்போகுது, நடக்கப்போகுது' என எதிர்பார்க்க வைத்து வைத்து எண்ட் கார்டே போட்டுவிடுகிறார்கள். முதல் பாகத்தில் தொக்கி நிற்கும் எல்லாக் கேள்விகளுக்கும் கமல் பதில் சொல்கிறார்தான். ஆனால், சொல்லும்விதம்தான் அரதப்பழசான ஃபார்மட். மோசமான கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் படத்தில் ஏற்கெனவே இழையோடும் செயற்கைத்தன்மையை இன்னும் அதிகமாக்குகிறது.

படம் ஏற்கெனவே நீளமாக இருக்கிறது. அதில் மக்கள் நீதி மய்யம் பற்றிய புரொமோஷன்கள் வேறு. கடைசிவரை தமிழ்ப் பரப்புக்குள் வருவேனா என, கதை வேறு முரண்டுபிடிப்பதால் எந்தவித உணர்ச்சியையும் வழங்காமல் முடிகிறது படம். 

விஸ்வரூபம் 2

முதல் பாகத்தில் இறங்கி சிக்ஸ் அடித்த விஸாம் அஹமது காஷ்மீரி, செகண்ட் இன்னிங்ஸில் நிதானம் காட்டியிருக்கிறார்!  

Categories: 

Admin Tags: 

Add new comment

left

All the latest news and live updates on politics, arts, entertainment, events in Sri Lanka, India, World, States and Cities from, Makkal Kural

 
 

Newsletter

எமது செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற