Posted by Editor on June 25, 2018

'ஒரு மனிதனின் உயரத்துக்கு ஏற்றவாறு, உடல் எடை இருக்க வேண்டும்' என்பது மருத்துவ விதி. அதற்குமாறாக எடை கூடவோ, குறையவோ செய்தால் நோய்கள் தாக்கும் அபாயம் அதிகம். உடல் பருமன் அதிகரித்தவர்கள் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் ஷாப்பிங் மால்களில் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது முதல்  இயல்பான வேலைகளைச் செய்வது வரை எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஏராளம். 
`உடல் எடை எதனால் கூடுகிறது, எடை குறைக்க என்ன செய்ய வேண்டும், உடல் பருமனைப் பராமரிப்பது எப்படி...' என்பதுபோன்ற கேள்விகளை உடல்பருமன் அறுவை சிகிச்சை நிபுணரிடம் முன் வைத்தோம். 

“ஒருவர் சாப்பிடும் உணவு,  அவரது உடல் வளர்ச்சிக்கு எந்தளவுக்கு உதவுகிறது என்பதைக் குறிப்பது வளர்சிதை மாற்றம் எனப்படும் மெட்டபாலிசம் (Metabolism). இந்த வளர்சிதை மாற்றம் குறைவாக உள்ளவர்கள் குறைவான உணவைச் சாப்பிட்டாலும் அவர்களது உடல் பருமன் கூடிவிடும். மெட்டபாலிசம் சரியாக இல்லையென்றால், உடலில் தேவையற்றக் கொழுப்பு அதிகமாகத் தேங்கி, உடல் பருமன் அதிகரிக்கும். மரபணு காரணங்களாலும் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதாலும்கூட உடல் எடை கூடும். 

அலுவலகத்தில் வேலை பார்க்கும் சிலர் சரியான நேரத்தில் சாப்பிட மாட்டார்கள். நேரம் தவறிச் சாப்பிடுவது, காலை உணவைக் குறைவாக உண்பது, மதிய வேளையில் அளவுக்கதிகமாகச் சாப்பிடுவது, இரவில் வயிறுமுட்டச் சாப்பிடுவது என உணவு விஷயத்தில் ஒழுங்கற்று இருப்பார்கள்.  சிலர் காலை உணவைத் தவிர்த்துவிட்டு மதியம் தேவைக்கு அதிகமாகச் சாப்பிடுவார்கள். இதனாலும் எடை அதிகரிக்கும். இரவில் அதிகமாகச் சாப்பிடுவதை உடல் ஏற்றுக்கொள்ளாது. இதை ‘அன் ஹெல்த்தி’, ‘அன் டைம்லி டயட்’ என்கிறோம். ஃபாஸ்ட்ஃபுட் உணவகங்களில் சாப்பிடுவது, கூல்டிரிங்ஸ், எனர்ஜி டிரிங்ஸ், பியர் போன்ற மது வகைகள், சோடா, பர்கர், பீட்ஸா போன்றவற்றாலும் உடல் பருமன் கூடும். 

உடல் எடையைப் பராமரிப்பதற்கான வழிமுறைகள்! 

*  'பேலியோ டயட்', 'கீட்டோ டயட்' என நிறைய டயட் முறைகள் உள்ளன. இவற்றில் புரோட்டின், கொழுப்புச்சத்து அதிகமாகவும் மாவுச்சத்தைக் குறைவாகவும் கொடுப்பார்கள். உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கடைப்பிடிக்கலாம்.

*  குறித்த நேரத்தில் சாப்பிட வேண்டும். 

* மாவுச்சத்து, புரோட்டின் உணவுகளைத் தேவையான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

*  அதிகமான உடலுழைப்பு இல்லாதவர்களுக்கு உடல் எடை கூடும். அவர்கள் தினசரி 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். முறையாக உடற்பயிற்சி செய்தால், சாப்பிட்ட உணவு எளிதாக ஜீரணமாகிவிடும். அன்றாடம் சிறிது தூரமாவது நடப்பதையோ, ஓடுவதையோ  பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

உடல் எடை குறைக்கும் கருவி

*  அரிசி, சர்க்கரை மற்றும் சப்பாத்தி, பிரெட் போன்றவற்றை அளவுக்கதிமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.  

*  ஒவ்வொரு உணவு வேளைக்கும் இடையே நான்கு மணி நேர இடைவெளி தேவை.

*  குறைந்தது  8 மணி நேர உறக்கம் அவசியம். அப்போதுதான் உடலிலுள்ள குரோத் ஹார்மோன் (Growth hormone) அதிகமாகும். இது உடல் எடை கூடுவதைத் தடுக்கும். அதேபோன்று, இரவு உணவுக்கும் உறக்கத்துக்கும் இடையே ஒன்றரை மணிநேர இடைவெளி இருக்க வேண்டும்.  

உறக்கம்

*  ‘கிரேசிங் டைப் டயட்’ (Grazing Diet) மேற்கொள்வதாலும் உடல் பருமனைப் பராமரிக்கலாம். இத்தகைய டயட் சீனாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கண்ட வழிமுறைகளைக் கடைப்பிடித்தும் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க முடியவில்லை என்றால், மருத்துவரின் அறிவுரைப்படி ‘எண்டோஸ்கோபி' (Endoscopy) முறையைப் பயன்படுத்தலாம். இதில் இரைப்பை வரை சென்று, அங்கே சிறிய பலூன் வைக்கப்படும்.  இதனால் எப்போதும் சாப்பிட்டது போன்ற உணர்வு இருக்கும். அதனால், அதிகமாக உணவு உண்ண முடியாது.  இதை 6 மாதங்கள் வரை வைத்திருந்து, பிறகு, பலூனை எடுத்துவிட வேண்டும். இந்தமுறையால் உடல் எடையை சுமார் 15 கிலோ வரை குறைக்கலாம். அறுவை சிகிச்சையில்லாத புதிய வழிமுறை இது. 

உடல் பருமனைக் குறைக்க முடியாதவர்களுக்கு நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் தீர்வு காணலாம். மேலும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ரத்தஅழுத்தம் உள்ளவர்களுக்கும் இந்த சிகிச்சை பயன்படும். ஒருவரது உயரத்துக்கு ஏற்ப அவர் எவ்வளவு எடை இருக்க வேண்டும் என்பதை அளவிடும்முறையே பி.எம்.ஐ. (B.M.I). சிகிச்சை எடுப்பவருக்கு பி.எம்.ஐ., 35-க்கு மேல் இருக்க வேண்டும். அப்போதுதான் பிரச்னையின்றி சிகிச்சை தர முடியும்” என்கிறார்  அனிருத் ராஜ்குமார். 

Categories: 

Admin Tags: 

Add new comment

left

All the latest news and live updates on politics, arts, entertainment, events in Sri Lanka, India, World, States and Cities from, Makkal Kural

 
 

Newsletter

எமது செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற