Posted by Editor on May 28, 2018

புவியின் இயற்கைச் சமநிலையை மனிதனே எப்பொழுதும் குழப்பி வருகின்றான். பூமியில் அத்தனை அம்சங்களும் நன்கு சீரமைக்கப்பட்ட வகையிலேயே இயற்கையாக அமைந்திருக்கின்றன. புவியின் இயற்கைச் சமநிலைக்கு மனிதன் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்குகின்றபோதுதான், புவியானது மனிதனின் மீது தாக்குதலைத் தொடுக்க ஆரம்பிக்கின்றது. இவற்றில் ஒன்றுதான் இயற்கை அனர்த்தம் ஆகும்.  

இலங்கையின் புவியியல் தோற்ற அமைப்பு குறுகிய காலத்துக்குள் மாறிப் போயிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றார்கள். மனிதன் தனது சுயதேவைக்காக இயற்கை வளங்களைச் சுரண்ட ஆரம்பித்ததும்தான் பிரச்சினைகளும் தோன்ற ஆரம்பித்தன.  

எமது நாட்டில் சிறிய மழைக்குக் கூட ஏற்படுகின்ற வெள்ளம், மண்சரிவு, கடும் வரட்சி போன்றவற்றுக்கெல்லாம் பிரதான காரணமே மனிதனின் செயற்பாடுகள்தான்.  

மனிதன் தனக்குரிய குடிமனைகளையும் பயிர்ச் செய்கை நிலங்களையும் அமைத்துக் கொள்ள முற்படும் போது எந்தவொரு நியதியையும் பின்பற்றத் தவறி விடுகின்றான்.  

காடுகளை மோசமாக அழிக்கின்ற போது சூழல் வெப்பமடைவது அதிகரிக்கும் என்பது குறித்தோ, பிராணிகளின் வாழிடம் அழிக்கப்படுகிறது என்பதையிட்டோ மனிதன் கவலைப்படுவதில்லை. மனிதனின் நோக்கம் காடுகளை அழித்து தனக்குரிய காணிகளை உருவாக்கிக் கொள்ளுதல் ஆகும். இல்லையேல் காட்டுமரங்களை தனது தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளுதல் ஆகும்.  

இலங்கையில் கடந்த சுமார் கால் நூற்றாண்டு காலத்தில் பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டு விட்டன. இதனால் ஏற்படவிருந்த பிரதிகூலங்களையிட்டு மனிதன் கவலைப்படவில்லை. அரசாங்கங்களும் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. அரசாங்கங்கள் நினைத்திருந்தால் சட்டத்தைக் கடுமையாக்கி காடுகள் அழிக்கப்படுவதை முற்றாகவே தடுத்து நிறுத்தியிருக்க முடியும்.  

இலங்கையில் இயற்கைச் சமநிலை குலைந்து போனதற்கும், அனர்த்தங்கள் அதிகரித்து வருவதற்கும் காடழிப்பு பிரதான காரணமென்று சூழலியலாளர்கள் அப்போதிருந்தே கூறி வருகின்ற போதிலும், எவருமே அதனை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.  

மனிதன் காடுகளை அழிக்கத் தொடங்கியதால் அங்கு வாழ்ந்த அரியவகை உயிரினங்கள் வாழ்விடத்துக்கான சவாலை சமாளிக்க முடியாமல் அழிவின் விளிம்பை நெருங்கி விட்டன. நரி, தேவாங்கு, மரஅணில், பறக்கும் அணில், முயல், மான், மரை, பன்றி, சிறுத்தை மற்றும் வண்ணப் பறவையினங்கள் என்றெல்லாம் ஏராளமான உயிரினங்கள் முற்றாகவே அழிந்து போகும் அபாயநிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றன. எதிர்காலத்தில் இப்பிராணிகளையெல்லாம் எமது சந்ததியினர் வெறும் படங்களிலேயே பார்க்கும் துரதிர்ஷ்ட நிலைமை ஏற்படத்தான் போகின்றது.  

எமது நாட்டின் இயற்கை வளங்களில் ஒன்றான காடுகளை அழித்து அங்கு குடியேற்றங்களை அமைப்பதனாலேயே காட்டு யானைகள் இப்போது பெரும் அச்சுறுத்தலுக்குரியதாகி விட்டன. யானைகள் தங்களது வாழிடம் அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதனால் உணவுக்காக மனித குடியிருப்புகளை நாடி வரத் தொடங்கி விட்டன. யானைக்கும் மனிதனுக்குமான யுத்தம் தீவிரமடைந்து விட்டதனால் மனித உயிர்கள் வீணாகப் பலியாகின்றன. பயிர்ச் செய்கைகளும் அழிக்கப்படுகின்றன. யானைகளின் இருப்பிடங்களை அபகரித்துக் கொண்ட பின்னர், அவற்றுக்கு எதிராகப் போராடுவதும், பாதுகாப்புத் தருமாறு அரசாங்கத்தைக் கோருவதும் நியாயமில்லை.  

இயற்கை வளங்களைச் சுரண்டி புவியின் சமநிலையைச் சீர்குலைக்கும் காரியம் இலங்கையில் மட்டுமின்றி உலகளவில் இடம்பெற்றுக் கொண்டே வருகின்றது. இவற்றின் காரணமாகவே இயற்கை அனர்த்தங்களும் அதிகரித்தபடி செல்கின்றன. நாட்டில் தற்போது வெள்ளத்தினால் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பொருத்தமற்ற இடங்களில் குடிமனைகள் அமைக்கப்பட்டதன் விளைவாகவே அனர்த்தப் பாதிப்புகள் கூடுதலாக இடம்பெற்றன என்பதை நாம் கருத்திற் கொள்வது முக்கியம். வெள்ளநீர் விரைவாக வடிந்தோடுவதற்கு இடமில்லாததால் அனர்த்த நிலைமை மோசமடைந்துள்ளது.  

சட்டவிரோத கட்டடங்களாலேயே நகரப் பகுதிகளில் திடீர் வெள்ள அனர்த்தம் ஏற்படுகின்றது. கொழும்பு நகரை எடுத்துக் கொள்வோமானால் அங்கு சட்டவிரோத கட்டடங்கள் எண்ணிக்கையற்ற அளவில் காணப்படுகின்றன. சேரிப் புறங்களாகக் காணப்படுகின்ற இடங்களில் உள்ள வீடுகள் உண்மையிலேயே சட்டபூர்வமான கட்டடங்கள் அல்ல. அவற்றுக்கு  சட்டபூர்வமான ஆவணங்களும் கிடையாது. கழிவுநீர் வடிந்தோடும் கான்களையும், வீதியின் ஒரு பகுதியையும் ஆக்கிரமித்தபடி பலரும் வீடுகளை அமைத்துக் கொண்டுள்ளனர். இது பலவந்தமானதொரு செயற்பாடாகும்.  

ஆனாலும் சட்டபூர்வமான ஆவணங்கள் இல்லாத ஒரு கட்டடத்துக்கு மின்சார விநியோகமும், நீர்க்குழாய் இணைப்பும் எவ்வாறு வழங்கப்பட்டன என்பதுதான் புரியாத புதிராக இருக்கின்றது.  

கொழும்பில் சிறியதொரு மழைக்கும் வெள்ளம் ஏற்பட்டு, வீடுகள் வெள்ளத்தில் மூழ்குவதற்கு இந்த சட்டவிரோத கட்டடங்களே காரணமாகும். இயற்கை அனர்த்தங்களைப் பொறுத்தவரை மக்களுக்கு வெறுமனே விழிப்புணர்வை ஏற்படுத்துவதால் மட்டும் பயன் கிடைத்து விடப் போவதில்லை. சட்டங்கள் வலிமையாக்கப்படுவது அவசியம். அச்சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதும் அவசியம்.  

நாட்டுக்கென்று பொருத்தமான சட்டதிட்டங்கள் நடைமுறையில் உள்ளன. கட்டடங்களை நிர்மாணிப்பதானால் சட்டதிட்டங்களை அனைவரும் உரியபடி கடைப்பிடிப்பது அவசியம். அரசுக்குச் சொந்தமான பொதுஇடங்களை கண்டபடி எவரும் ஆக்கிரமித்து, தமக்குரிய கட்டடங்களை அமைத்துக் கொள்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு குற்றங்களுக்கு இடமளிப்பதனாலேயே வெள்ள அனர்த்தமும் அதிகரித்தபடி செல்கின்றது.    

 

Categories: 

Admin Tags: 

Add new comment

left

All the latest news and live updates on politics, arts, entertainment, events in Sri Lanka, India, World, States and Cities from, Makkal Kural

 
 

Newsletter

எமது செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற