Posted by Editor on July 17, 2018

செல்வச் சிறப்புடைய ஆதித் தமிழர், மாபெரும் கடலைக் கடந்து செல்லும் திறமை பெற்றிருந்தார்கள். அவர்கள் 'நாவாய்' என்ற மிகப் பெரிய கப்பலில் சென்றார்கள். (தமிழ்ச் சொல் 'நாவாய்', கிரேக்கத்தில் 'நாஸ்' என்று திரிந்தது. லத்தீனில் 'நேவிஸ்' என்று உருமாறியது. இன்று ஆங்கிலத்தில் 'நேவி' என்றுள்ளது. கிரேக்கர், ரோமருக்கு முன்பே தமிழர் கடற்பயணம் மேற்கொண்டவர்கள் என்ற உண்மை இதன்மூலம் தெரிகிறது)

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழக வணிகர், நீலநடுக்கடல் பகுதிக்குச் சென்றார்கள். அவர்களை 'பினிஷியர்' என்று வரலாறு குறிப்பிட்டது. தொல்காப்பியர், தமிழரின் கடற்பயணம் பற்றிக் குறிப்பிட்டார். அவர் கடற் பயணத்தை 'முந்நீர் வழக்கம்' என்றார்.

தொல்தமிழர், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரவினார்கள். கி.மு. 900 அளவிலேயே தமிழ் வணிகர் தாய்லாந்துக்குச் சென்றனர் என்று வரலாறு கூறுகிறது. 'திரைகடலோடியும் திரவியம் தேடு' என்ற முதுமொழி, தமிழரின் கடற் பயணத்தைப் பதிவு செய்தது. அன்று 'தாய்லாந்து' என்ற பெயர் இல்லை. அந்நாடு 'சயாம்' எனஅழைக்கப்பட்டது. அண்மைக்காலத்தில்தான் அங்குள்ள 'தாய்' என்ற இன மக்களின் பெயரால் அது 'தாய்லாந்து' என்ற பெயர் மாற்றம் பெற்றது.

அந்த நாட்டில் பல சமஸ்கிருதக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.இவை பல்லவ கிரந்த சமஸ்கிருத எழுத்து முறையில் அமைந்தவை. எனவே, தமிழகத்தை ஆட்சி செய்த பல்லவர்களின் காலத்திலேயே தாய்லாந்தில் தமிழர் இருந்தனர் என்ற உண்மையை இக்கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.

"நெடுங்காலத்திற்கு முன்பே தாய்லாந்தில் தமிழர் வாழ்ந்தனர்" என்று பிரெஞ்சு அறிஞர் ஜூன் பிலியோசா அறிவித்தார். 'தமிழி' எனப்படும் தமிழ் - பிராமி எழுத்து முறை அசோகப் பேரரசனின் (கி.மு.400) ஆட்சிக் காலத்துக்கும் முற்பட்டது. இந்தத் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடு ஒன்று தாய்லாந்தின் 'பூ கே தாங்' என்ற இடத்தில் நடைபெற்ற அகழ்வாய்வில் 2006 -ஆம் ஆண்டு கண்டெடுக்கப் பட்டது. அது தமிழ் பிராமி கல்வெட்டுதான் என்பதைத் தமிழ்நாடு தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவனும், வாஷிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரிச்சர்ட் ​ெசாலமனும் உறுதி செய்தனர்.

தாய்லாந்தின் 'தகுவாபா' நகரிலுள்ள 'வாட் நா மியாங்' என்ற கோயிலில் தமிழ் எழுத்தில் அமைந்த கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மணிக்கிராமம் என்ற தமிழக வணிகர் குழுவினர் அங்கு திருமால் குளம் ஒன்று அமைத்தனர். அவர்களுக்கு 'சேனாமுகம்' என்ற பாதுகாப்புத் தமிழர்படை துணையாக இருந்தது. மணிக்கிராமத்தார் அந்தக் குளத்துக்கு 'அவனி நாரணன்' என்ற பெயர் வைத்தனர் என்ற தகவலை அத்தமிழ்க் கல்வெட்டு அறிவிக்கின்றது.

இந்தக் கல்வெட்டை வரலாற்றறிஞர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார் ஆய்வு செய்தார். "இந்தக் கல்வெட்டு மூன்றாம் நந்திவர்ம பல்லவ மன்னனின் காலத்துக்கு உரியது. அந்த அரசனின் ஆதிக்கம், சிறிது காலமாவது அந்தப் பகுதியில் இருந்திருக்கலாம்" என்றார் அவர். நந்திவர்மனின் பட்டப்பெயர்களில் 'அவனி நாரணன்' என்பதும் ஒன்று. அந்தப்பட்டப் பெயரே அங்கு வெட்டப்பட்ட குளத்துக்குச் சூட்டப்பட்டது.

14 -ஆம் நூற்றாண்டில் தாய்லாந்தின் ஒரு பகுதியை இராமகோமங்கு என்ற அரசன் ஆண்டு வந்தான் என்று கல்வெட்டு சொல்கிறது. அவன் 'இராசாதிராசன்' என்ற பட்டப் பெயரைச் சூட்டிக் கொண்டிருந்தான். இந்தப் பட்டப்பெயர் சோழ மன்னர்களுக்கு உரியது. எனவே, சோழராட்சியின் தாக்கமும் தாய்லாந்தில் இருந்திருக்கும்.

தொடக்க காலத்தில் வணிகம் காரணமாகத் தமிழர்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சென்றார்கள் (பழைமை ஸ்ரீ விஜயம் என்ற நாட்டில் தமிழ் மன்னரின் ஆட்சியும் நடைபெற்றுள்ளது).

இராசேந்திர சோழனின் படையெடுப்புக்குப் பிறகு மலேசியா, தாய்லாந்து முதலிய நாடுகளில் தமிழர்களின் குடியேற்றங்கள் அமைந்திருக்கும். மாலிக்காபூர் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தபோது, அச்சம் கொண்ட தமிழ்க் குடும்பங்கள், தாய்லாந்துக்குக் குடிபெயர்ந்ததாகத் தெரிகிறது. சமயம் பரப்பும் காரணத்திற்காகவும் கூட, தமிழர் தென் கிழக்காசிய நாடுகளுக்குப் போயிருக்கலாம். முக்கியமாக, புத்தமதத்தைப் பரப்புவதற்காக, தமிழ் நாட்டுப் புத்த சமயத்தினர் அங்கு சென்றனர் என்று தெரிகிறது. இப்படிப்பட்ட பல காரணங்களால், தமிழர்கள் தாய்லாந்துக்குப் போயிருக்கிறார்கள்.

தாய்லாந்தில் இந்து சமயம் முன்பு பரவியிருந்தது. அரசன் இராமகோமங்கு, மகேசுவரன் (சிவன்) திருமால், ஆகிய கடவுள்களுக்குக் கோயில்களைக் கட்டினான். தாய்லாந்தில் சிவ வழிபாடு ஐந்தாம் நூற்றாண்டிலேயே இருந்தது என்று ஸ்டான்லி ஓ கான்னர், மாலரேட் ஆகிய ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். பனமரும் எனும் ஊரில் மிகப்பெரிய சிவன் கோவில் கட்டப்பட்டது. இது பத்தாம் நூற்றாண்டுக்கு உரியது. பீமாய், லியாங்சிரா முதலிய இடங்களிலும் சிவன் கோயில்கள் கட்டப்பட்டன.

திருமால் வழிபாடும் தாய்லாந்தில் இருந்தது. தகுவாபா ஆற்றங்கரையில் 'கெளபிரா நாராய்' எனும் இடத்தில் திருமால், சிவன், பிரம்மா ஆகியோரின் சிலைகள் கிடைத்தன. நாகோன் சிடம்மாராட், செய்யா முதலிய இடங்களிலும் விஷ்ணு சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இன்றும் அங்கு புத்தர் கோயில்களில், திருமாலின் சிற்பங்களும் சிலைகளும் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமல்ல, புத்த குருமார்கள் சமயச் சொற்பொழிவு ஆற்றும்போது விஷ்ணுவையும் சிவனையும் பற்றிக் குறிப்பிடுகின்றனர். தாய்லாந்துக்குச் சென்ற வணிகர்களுக்கு, காரைக்கால் அம்மையார் குல தெய்வமாக விளங்கினார். தாய்லாந்தில் காரைக்கால் அம்மையாரின் சிலைகளும் கிடைத்துள்ளன. அகத்தியர் வழிபாடும் அங்கு முன்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

பாங்காக் நகரின் சிலாம் சாலையில் மாரியம்மன் கோயில் ஒன்று அண்மையில் கட்டப்பட்டது. இதன் புகழ் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. மாரியம்மனை, உமாதேவி என்றும் சொல்கின்றனர். தாய் மக்களும் சீனர்களும் இந்த உமாதேவியைத் தொழுது வணங்குகின்றனர் உமாதேவியை 'செளமே தேவி' என்று அவர்கள் சொல்கின்றனர்.

இலக்கியத்துறையிலும் தமிழகம் - தாய்லாந்து உறவு உள்ளது. வால்மீகியின் காப்பியத்தைத் தழுவி, கம்பர் தமிழில் இராம கதையை எழுதினர். இந்த நூல் தாய்லாந்து மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து மக்களின் மொழியில் பல தமிழ்ச் சொற்கள் திரிபுற்று கலந்துள்ளன. எனவே, நெடுங்காலத்திற்கு முன்பே தமிழ்ச் சொற்கள் தாய் மொழியில் கலந்துவிட்டன என்று ஊகிக்க முடிகிறது.

பண்டிகை, சடங்கு முதலியவற்றிலும் தமிழகத்தின் தாக்கம் தாய்லாந்தில் அமைந்துள்ளது. பொங்கல் பெருவிழா 'தமிழர் திருநாள்' என்று கூறுமளவிற்குசிறப்பான தமிழர் பண்டிகை. இந்த விழா தாய்லாந்திலும் நடைபெறுகின்றது.கார்த்திகை விழாவும் தாய்லாந்து நாட்டில் நடைமுறையில் உள்ளது.

விருந்தோம்பல் தமிழரின் சிறந்த பண்புகளில் ஒன்று. இந்தப் பண்பு தாய்லாந்திலும் மிகவும் போற்றப்படுகின்றது. அந்நாட்டு மன்னரின் முடிசூட்டு விழாவின்போது பிராமணர்களால் தமிழ்ப்பாடல்கள் பாடப்படுகின்றன. இவை மந்திரம் போல ஒலிக்கின்றன. இந்தச் செய்கை தமிழ்மொழிக்கு அங்குத் தரப்படும் தனிப்பெருஞ்சிறப்பு.

வரலாறு, சமயம், இலக்கியம், விழாக்கள், சடங்குமுறை முதலியவற்றில் தாய்லாந்தில் தமிழரின் தாக்கம் இருப்பதை உணரலாம். இன்றும் அங்கே தமிழக வணிகர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

Categories: 

Admin Tags: 

Add new comment

left

All the latest news and live updates on politics, arts, entertainment, events in Sri Lanka, India, World, States and Cities from, Makkal Kural

 
 

Newsletter

எமது செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற